உலகே !
நீ எவ்வளவு கருணையுடன் விளங்குகின்றாய்?
பெற்றதை இழந்து
மீண்டும் பெறமுடியாது தத்தளிக்கும்
உன் மக்களுக்காக
நீ சேமித்து வைத்திருக்கும்
உனது பேராற்றல் எவ்வளவு விந்தையானது!
நாங்கள் கூக்குரலிடுகின்றோம்.
நீ புன்முறுவல் பூக்கிறாய். !
நாங்கள் திடுமென ஓடி மறைந்து அழிக்கிறோம்;
நீ நிலைத்து செழித்து நிற்கிறாய்!
நாங்கள் தீமைகளைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றோம்.
நீ பேசாமலிருந்து தூய்மை காட்டுகிறாய்.
நாங்கள் அறம் பிறழ்ந்திருக்கிறோம்
நீ அறத்தின் வடிவாக திகழ்கிறாய்.
கனவுகளின்றி நாங்கள் உறங்குகிறோம்.
நீ உனது புனித விழிப்பில் கனவுகள் காண்கின்றாய்.
நாங்கள் நின் மார்பில்
வேலாலும் வாளாலும் துளைக்கிறோம்
நீயோ , மருந்திட்டு
எங்கள் காயங்களுக்கு கட்டுப் போட்டு
ஆற்றி நலம் செய்கிறாய்.
நின் வயல்களில் நாங்கள்
மண்டையோடுகளையும் , எலும்புகளையும்
விதைக்கிறோம்.
நீயோ அவற்றிலிருந்து
புல்லையும் பசிய மரங்களையும்
விளைவிக்கின்றாய்.
நாங்கள் எங்கள் கழிவுகளை
நின் மார்பிலே கொண்டு வந்து கொட்டுகிறோம்.
நீயோ , எங்கள் களஞ்சியங்களை
தானியங்களை நிறைத்துவிடுகிறாய்
திராட்சை பானம் செய்யும் இடங்களை,
திராட்சை கனிகளால் நிறைத்துவிடுகிறாய்.
நாங்கள் வெடிகுண்டு செய்ய
உனது மூலப்பொருளை தோண்டி எடுக்கிறோம்
நீயோ எங்கள் மூலப்போருல்களில் இருந்து
எழில்குலுங்கும் அள்ளி மலர்களையும்
ரோஜா மலர்களையும் தொற்றுவிக்கின்றாய்.
உலகே
நீ கதிரவன் பழுக்க வைத்த கனியோ?
வானப்பெரு நிலத்தில் வேர் ஊன்றி
எல்லையற்ற பரவெளியில் கிளை பரப்பி
நின்று கொண்டிருக்கும்
பூரண ஞான மரத்தின் அழகுக் கனியோ !
வானத்தேவன் உள்ளங்கையில்
காலதேவன் வைத்த கருமணியோ நீ?
உலகே நீ யார்?
நீ எதனால் ஆக்கப்பெற்றிருக்கிறாய்?
உலகே நீ தான் நான்.
நீயே என் கண். நீயே என் பார்வை.
நீயே என் அறிவு. நீயே என் கனவு.
நீயே என் பசியும், தாகமும்.
நீயே என் கவலையும் மகிழ்ச்சியும்
நீயே என் மறதியும் நினைவும்
என் கண்களில் வாழும் அழகு நீ!
என் இதயத்தில் பொங்கியெழும் ஆவல் நீ.
என் உயிரின் அழியா வாழ்வு நீ!
உலகே நீயே நான்.
மூலம்: ஞானக்களஞ்சியம் கலீல் கிப்ரான்
No comments:
Post a Comment